தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும்: சகாயம்

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-09-04 14:22 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான பொருட்கள், தங்கத்தாலான அணிகலன்கள் போன்றவை கண்டறியப்பட்டது.

ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணிகளை முன்னாள் கலெக்டரும், ஊழல் எதிர்ப்பு தமிழ் போராளிகள் அமைப்பு தலைவருமான சகாயம் நேற்று பார்வையிட்டார். அங்கு நடைபெற்று வரும் அகழாய்வு குறித்து ஆய்வாளர்கள் விளக்கம் அளித்தனர்.

பின்னர் சகாயம் கூறுகையில், ''3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நாகரிகத்தில் தலைசிறந்து விளங்கியதற்கான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே இன்னும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். ஆதிச்சநல்லூரில் இருந்து பல்வேறுகட்ட அகழாய்வு மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பழங்கால பொருட்களையும் மீட்டு கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெருமை வாய்ந்த தமிழர்கள் நாகரிகத்துடன் பிற இனத்தவர்கள் தொடர்பில் இருந்தார்களா? வணிகம் செய்தார்களா? போன்றவற்றையும் கண்டறிய வேண்டும். தமிழகம் இந்தியாவின் இன்றியமையாத பகுதியாகும். தமிழர்களின் பெருமையானது நமது நாட்டுக்கும் பெருமையாகும். எனவே மத்திய அரசு தாமாக முன்வந்து கூடுதல் முயற்சி எடுத்து தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்