கொட்டித்தீர்த்த மழையால் சேறும், சகதியுமான கோவை மாநகரம்

கொட்டித்தீர்த்த மழையால், கோவை மாநகரம் சேறும், சகதியுமாக மாறியது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கிய நீரால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

Update: 2023-05-03 19:15 GMT

கோவை

கொட்டித்தீர்த்த மழையால், கோவை மாநகரம் சேறும், சகதியுமாக மாறியது. அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கிய நீரால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

கோடை மழை

கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 1½ மணி நேரம் பெய்த பலத்த மழையால் மாநகரின் பல இடங்களின் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறிப்பாக லங்கா கார்னர், அவினாசி ரோடு பழைய மேம்பாலத்தின் கீழ்பகுதி, வட கோவை மேம்பாலம், கிக்கானி பள்ளி அருகே உள்ள ரெயில்வே சுரங்க பாதை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் பல அடி உயரத்திற்கு தேங்கியது.

இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சேறும், சகதியுமாகியது

சுரங்க பாதைகளில் தேங்கிய மழைநீர் ராட்சத மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டது. இது தவிர சுங்கம், மேட்டுப்பாளையம் சாலை, சுந்தராபுரம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை மேற்கண்ட இடங்கள் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஆர்.எஸ்.புரம் வாழைத்தார் சந்தை, எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளிட்டவையும் சகதி காடாக காட்சியளித்தது. இதனால் அங்குள்ள வியபாரிகள், தொழிலாளர்கள் அவதி அடைந்தனர்.

தரைப்பாலம் சேதம்

மதுக்கரை ஆற்று விநாயகர் கோவில் அருகே ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த தரைப்பாலத்தின் மீது 4 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை வெள்ளம் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்து அடித்து செல்லப்பட்டது. மேலும் அதில் சிக்கிய வாலிபர் ஒருவரை அந்த பகுதி பொதுமக்கள் மீட்டனர். தொடர் மழையால் கிருஷ்ணாம்பதி, முத்தண்ணன் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதில் முத்தண்ணன் குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறியது.

இதற்கிடையில் கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று காலை வரை சில அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றது. இதனால் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் கடும் அவதி அடைந்தனர். எனவே கோவை மாநகரில் மழைநீர் தேங்காமல் இருக்க தொலைநோக்கு திட்டங்களை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்