கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை பரிதாப சாவு

புதுக்கோட்டையில் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.;

Update: 2023-05-17 18:15 GMT

2 வயது குழந்தை

புதுக்கோட்டையில் கீழ 3-ம் வீதியில் வசித்து வருபவர் ரெங்கசாமி. இவரது மனைவி தேவி (வயது 25). இந்த தம்பதியினருக்கு 2 வயதில் அனிதா என்ற பெண் குழந்தையும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளது. ரெங்கசாமி தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் கட்டில் மெத்தையில் குழந்தை அனிதா விளையாடி கொண்டிருந்தது.

அப்போது குழந்தை மெத்தையில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிதாப சாவு

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் குழந்தை அனிதா நேற்று பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கட்டிலில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தவறி கீழே விழுந்து இறந்தது பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்