வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை சாவு

கொள்ளிடம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2022-10-17 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் ஊராட்சி செங்கல்மேடு கிராமம் கொடுக்கால்வலி தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு 2½ வயதில் அமரன் என்ற ஆண்குழந்தை இருந்தது. நேற்று ரஞ்சிதா, தனது குழந்தை அமரனை அழைத்துக்கொண்டு கொள்ளிடம் தபால் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தபால் அலுவலக வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கண்ணிமைக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்து 10 அடி தூரத்தில் உள்ள தெற்கு ராஜன் வாய்க்காலில் தவறி விழுந்தது.

நீரில் மூழ்கி சாவு

 ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் நீரில் அடித்துச் செல்லப்பட்டான். சிறிது நேரம் கழித்து தனது குழந்தையை காணாதது கண்டு ரஞ்சிதா வெளியில் வந்து பார்த்தார். அப்போது அஙகு தனது குழந்தையை காணாதது கண்டு ரஞ்சிதா திடுக்கிட்டார். குழந்தையை தேடியபோது குழந்தை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது தரிய வந்தது.

உடனே அப்பகுதியில் உள்ளவர்கள் வாய்க்காலில் இறங்கி குழந்தையை தேடினர். நீண்டநேரம் தேடலுக்கு பிறகு கொள்ளிடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆச்சாள்புரம் கிராமத்தில் குழந்தை அமரனின் உடல் பிணமாக மிதந்தது. அந்த உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணை

சற்று நேரத்திற்கு முன்பு வரை விளையாடிக்கொண்டு இருந்த தனது குழந்தை நொடிப்பொழுதில் உயிரற்ற உடலாகி கிடப்பதை பார்த்து குழந்தையை மடியில் வைத்து ரஞ்சிதா கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்