மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டார்

மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.;

Update:2022-08-01 05:33 IST

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை கடந்த 28-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த போட்டியின் தொடக்க விழா கோலாகலமாக அமைந்திருந்தது. இது பல தரப்பில் இருந்தும் வெகுவான பாராட்டுகளை பெற்று வருகிறது.

விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் வீரர், வீராங்கனைகளுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து கேட்டறிந்து வருகிறார். அவர்களை உற்சாகப்படுத்தி ஆலோசனையும் வழங்குகிறார்.

நேரில் சென்றார்

இந்த நிலையில் நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கும் இடத்திற்கு மு.க.ஸ்டாலின் நேரில் முதல் முறையாக சென்றார். அவரை சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் அர்கடி துவார்கோவிச், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் ஆகியோர் வரவேற்றனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அலுவலர் தாரேஸ் அகமது மற்றும் சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

செஸ் போட்டிகள் நடக்கும் இடத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ள மாடத்தில் விஸ்வநாதன் ஆனந்துடன் அமர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டிகளை பார்வையிட்டார்.

டுவிட்டர் பதிவு

அதன் பின்னர் தனது டுவிட்டரில் முதல்-அமைச்சர் வெளியிட்ட பதிவு வருமாறு:-

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் உலகத்தரத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ளதற்காக அனைத்து தரப்புகளில் இருந்தும் குவிந்து வரும் பாராட்டுகளால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட்டின் வெற்றிக்காக அயராது பாடுபட்டு வரும் அதிகாரபூர்வ குழுவினரை ஊக்கப்படுத்துவதற்காக மாமல்லபுரத்தில் பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் இடத்துக்கு, கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்துடன் நேரில் சென்று பார்வையிட்டேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்