மாதவரம் பால்பண்ணையில் ஆவின் மாநில மைய ஆய்வகத்தை திறந்துவைத்தார் முதல் அமைச்சர்
ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.;
சென்னை,
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தினை உறுதி செய்யும் விதமாக தேசிய பால் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் 17,422 சதுர அடி பரப்பளவில் அதிநவீன பகுப்பாய்வு கருவிகளுடன் 8 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக தரபரிசோதனை செய்து திறந்து வைத்தார்.
இந்த ஆய்வகத்தில் உயர்தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி அனைத்து தர பரிசோதனைகளும், இந்த நவீன ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட ஒன்றியங்கள் மற்றும் இணையங்களில் இருந்து பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை ஒழுங்கு முறை ஆணையங்களின் விதிகளுக்குள் இருப்பதை உறுதி செய்வதற்கான தர பரிசோதனைகள் இந்த ஆய்வகத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும். இதன்மூலம், நுகர்வோர்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
மேலும், சேலம், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தேனி, ஈரோடு, திருவண்ணாமலை, மதுரை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 50 பணியாளர்களின் வாரிசுதார்களுக்கு, இளநிலை செயல்பணியாளர் (அலுவலகம்), இலகுரக வாகன ஓட்டுநர், தொழில்நுட்பர் மற்றும் முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.