அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் புதிய கட்டிடங்கள் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் ஆயிரம் பேர் தங்கி பயிற்சி பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-07-12 00:10 GMT

சென்னை,

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், பவானிசாகரில் 1974-ம் ஆண்டு அரசு அலுவலர் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டது. அரசு பணியில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு பெறும் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் பணியில் சேர்ந்தவுடன், அலுவலக பணியில் செம்மையாகவும், திறம்படவும் செயல்பட, அவர்களுக்கு அலுவலக நடைமுறை, பணி நடைமுறை, பொதுமக்கள் தொடர்பு, ஊடக வளர்ச்சி, கணக்கு ஆகியவை குறித்து அடிப்படை பயிற்சி அளித்து அவர்களது பணித்திறனை மேம்படுத்தி அரசு நிர்வாகத்தை வெற்றிகரமாக செயல்படுத்திட வைப்பதே இப்பயிற்சி நிலையத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் சுமார் 700 பேர் தங்கி அடிப்படை பயிற்சி பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 300 பயிற்சி பெறுவோர் தங்கி பயிற்சி பெறும் வகையில் ரூ.15 கோடி செலவில் 4 நவீன வகுப்பறைகள், 2 தங்கும் விடுதிகள், ஒரு உணவருந்தும் கூடம், ஒரு பல்நோக்கு அரங்கம் ஆகிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கூடுதலாக கட்டப்பட்டுள்ள இந்த 2 விடுதிகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித இடர்பாடுகளுமின்றி எளிதில் தங்கி பயிற்சி பெறும் வகையில் தனி அறைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

நவீன வசதிகள்

மேலும், பயிற்சி பெறுவோருக்கு சிறந்த கற்கும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 4 நவீன வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. புதிய பல்நோக்கு அரங்கில் ஒரே சமயத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர், உடற்பயிற்சி, யோகா பயிற்சி, கருத்தரங்குகள், சிறப்பு வகுப்புகள் போன்றவை நடத்துவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டமைப்பு வசதிகள் மூலம் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பணியாளர்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்கி அவர்களைத் திறன் மிகுந்தவர்களாகவும், சேவை நோக்கம் கொண்டவர்களாகவும் மாற்றி, அரசு நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தக்கூடியதாக அமையும். இந்த கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-ந் தேதி (நேற்று) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மனித வள மேலாண்மைத்துறை செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன், அண்ணா நிர்வாக பணியாளர்கள் கல்லூரியின் கூடுதல் இயக்குநர் எஸ்.ராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்