முதல்-அமைச்சரும், கவர்னரும் மறைமுக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நாடகம் நடத்துகின்றனர்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட விவகாரத்தில் முதல்-அமைச்சரும், கவர்னரும் மறைமுக ஒப்பந்தம் போட்டுக்கொண்டு நாடகம் நடத்துகின்றனர் என்று சி.வி.சண்முகம் எம்.பி. குற்றம்சாட்டினார்
விழுப்புரம்
போதைக்களமாக
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சி.வி.சண்முகம் எம்.பி., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு தமிழகம் ஒரு சூதாட்ட களமாகவும், போதை களமாகவும் மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருட்கள் விற்பனை, 24 மணி நேரமும் டாஸ்மாக் விற்பனை, கஞ்சா, கஞ்சா சாக்லேட் நீக்கமர அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தினால் தினம், தினம் விலைமதிக்க முடியாத இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு வருகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று அனைத்துக்கட்சிகளும், அனைத்து தரப்பு பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் காலம் தாழ்த்திக்கொண்டு வேறு வழியில்லாமல் எதிர்க்கட்சிகளின் ஆலோசனையைகூட முழுமையாக கேட்காமல் எதிர்க்கட்சிகள் சொன்ன, தேவையான சட்டதிட்டங்கள், கருத்துக்களையும் ஏற்காமல் இந்த சட்டம் இயற்றப்படக்கூடாது என்று திட்டமிட்டே இந்த அரசு செயல்படுகிறதோ என்று தோன்றுகிறது. அரைவேக்காடுத்தனமாக ஒரு சட்டத்தை இயற்றி அதை கவர்னருக்கு அனுப்பியுள்ளனர். கவர்னர், அதனை காலதாமதம் செய்து திருப்பி அனுப்பியுள்ளார்.
மறைமுக ஒப்பந்தம்
இதை பார்க்கும்போது இந்த அரசும், கவர்னரும் தங்களுக்குள் மறைமுகமாக ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு நாங்கள் சட்டமசோதாவை அனுப்புவதுபோல் அனுப்புகிறோம், நீங்கள் அதை தாமதப்படுத்துவதுபோல் தாமதப்படுத்தி திருப்பி அனுப்பிவிடுங்கள் என்றுகூறி நாடகம் நடத்தி வருகின்றனர். ஒரு பக்கம் கவர்னரை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ளும் தி.மு.க., மறுபக்கம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் மகனுடன் சென்று கவர்னருடன் அமர்ந்து டீ சாப்பிடுவது, பிஸ்கட், சமோசா ஆகியவைகளை சாப்பிட்டு உறவாடி வருகின்றனர்.
ஒரு தேவையான, அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்குகூட நிர்வாக திறமையற்றவராகவும், சட்டம்- ஒழுங்கை காப்பாற்றுகிற தகுதி இல்லாதவராகவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் இருந்து வருகிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்ற தொழிலாளர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின், அதை மறைப்பதற்காக ஆட்சியை கலைக்க சதி நடப்பதாக கூறி வருகிறார்.
இவ்வாறு சி.வி.சண்முகம் எம்.பி. கூறினார்.