மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-07-02 15:06 GMT

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய நீர்வளத்தறை மந்திரியை, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். அப்போது பெண்ணை ஆற்று பிரச்சினையில் தீர்ப்பாயம் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த போக்கு கடும் கண்டனத்துக்குரியதாகும். ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ள பிரச்சினைகளில், டி.கே.சிவக்குமார் தெரிவித்திருக்கும் கருத்துகள் உண்மைக்கு நேர் எதிராக அமைந்துள்ளன.காவிரியில் உரிய நீரை உடனடியாக திறந்துவிட தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.

கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கினை மத்திய அரசாங்கம் கண்டிப்பதுடன், இனியேனும் இப்பிரச்சினையை குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும். தமிழ்நாட்டின் நியாயமான நீர் பங்கீட்டு உரிமையை ஏற்பதுடன், புதிய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

மேகதாது பகுதியில் அணை ஏற்படுத்துவதற்கான எந்த அனுமதியையும் மத்திய அரசு வழங்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்