குறுக்கு வழியில் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்க நினைக்கிறது- முத்தரசன் குற்றச்சாட்டு

குறுக்கு வழியில் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்க நினைக்கிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2023-07-23 20:52 GMT


குறுக்கு வழியில் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்க நினைக்கிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

மணிப்பூர் கலவரம்

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதல் உலகத்தையே உலுக்கிய கொடூர சம்பவம். இதனால் மணிப்பூர் இந்தியாவில் தான் உள்ளதா? என கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் இத்தகைய சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. உலகநாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, விருதுகளை வாங்கி கொள்ளும் பிரதமர் மோடி சொந்த நாட்டு மக்கள் கொலை செய்யப்படும் போது மவுனமாக இருந்தார்.

உச்சநீதிமன்ற தலையீட்டால் பிரதமரின் உதடுகள் மணிப்பூர் விவகாரத்தில் அசைந்துள்ளது. மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதம் செய்ய பிரதமர் அச்சப்படுகிறார். நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் போராட்டம், ரெயில் மறியல் நடைபெறும். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள உள்ளேன்.

கூட்டணி

ஜனநாயக கொள்கைகளை முன்னிறுத்தி இந்தியா கூட்டணி உருவாகி உள்ளது. பல்வேறு கட்சிகளை உடைத்து சேர்த்துள்ள கூட்டணியே பா.ஜ.க. கூட்டணி. கட்சிகளை உடைத்து அதிக எண்ணிக்கையிலான கட்சிகளை பிரதமர் ஒருங்கிணைத்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியின் போது குட்கா ஊழல் செய்த எடப்பாடி பழனிசாமியை பக்கத்தில் வைத்து கொண்டு எதிர்க்கட்சிகளை ஊழல் கூட்டணி என பிரதமர் விமர்சிக்கிறார்.

மத்திய அரசு குறுக்கு வழியில் எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறார்கள். தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் துறையாக அமலாக்கத்துறை உள்ளது. தொடர்ந்து நேரு குடும்பம், கர்நாடக காங்கிரஸ், தி.மு.க. அமைச்சர்கள் மீது ரெய்டு விடப்படுகிறது. எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த, உடைக்க, குழப்பம் ஏற்படுத்த அமலாக்கத்துறை, வருமானவரித்துறை பயன்படுத்தப்படுகிறது. மோடி ஆட்சியில் மக்களின் நம்பிக்கையான நீதிமன்றமே கேள்விக்குறியாகி விட்டது. தமிழக பா.ஜ.க. விலைவாசியை குறைக்கச்சொல்லி டெல்லிக்கு சென்று தான் போராட வேண்டும். தமிழகத்தில் போராடுவது தேவையற்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்