'நீட்' தேர்வு தகுதிக்கான தேர்வு இல்லை என மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது -அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
‘நீட்’ தேர்வு தகுதிக்கான தேர்வு இல்லை என மத்திய அரசே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு புறநகர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் இதய தடுப்பு ஏற்பட்டு, பேஸ்மேக்கர் கருவி பொருத்தி சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்ட மணிமாலா மற்றும் அவரது குழந்தையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினரை பாராட்டினார். பின்னர், ரூ.17 லட்சம் செலவில் டிஜிட்டல் நுண்கதிர் பரிசோதனை கருவியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராயபுரத்தில் உள்ள அரசு புறநகர் ஆஸ்பத்திரி சென்னையின் அடையாளமாக உள்ளது. 72 ஆண்டுகளாக மிகச்சிறப்பான சேவையாற்றி வருகிறது. இங்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் டிஜிட்டல் நுண்கதிர் பரிசோதனை கருவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் மார்பக புற்றுநோய் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 2 வருடத்திற்கு ஒருமுறையும், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒருமுறையும் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள முடியும். இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாதங்களாக மகப்பேறு இறப்பு என்பது இல்லாத வகையில் சாதனைப்படைக்கப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வு
ஒவ்வொரு மாதமும் ஆயிரம் பிரசவங்கள் இங்கு நடக்கின்றன. மேலும், இந்த ஆஸ்பத்திரிக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.30 கோடி செலவில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அது விரைவில் திறந்து வைக்கப்படும். 'நீட்' தேர்வு தகுதிக்கான தேர்வு இல்லை என மத்திய அரசே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. முதுகலை மருத்துவ இடங்களை நிரப்பும்போது நீட் தேர்வில் பூஜ்ஜியத்திற்கு குறைவான மதிப்பெண் எடுப்பவர்களுக்கும் இடம் கிடைக்கும் என மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது. இந்த காரணத்தால் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற முயற்சி மேற்கொண்டு வருகிறார். நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்டில் நடைபெறும் வழக்குகளில் இதுதொடர்பாக எடுத்துரைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ மற்றும் டாக்டர்கள் கலந்துகொண்டனர்.
விழிப்புணர்வு பிரசாரம்
சென்னை அடையாறு, பெசன்ட்நகரில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் பிளிச்சீங் பவுடர் பாக்கெட்டுகளை வழங்கினார். இதேபோல, 'ஆரோக்கியமான நடைபயணம்' திட்டத்தின் கீழ், பெசன்ட் நகரில் 8 கிலோமீட்டர் தூரம் நடைபாதையை தேர்வு செய்ய ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொசுப்புழு ஒழிப்பு
டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய மருத்துவ முறை மருந்துகளான நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 4 ஆயிரத்து 227 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, தற்போது 343 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேர் இறந்துள்ளனர். சென்னையில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.14 லட்சத்து 87 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரவர் வீட்டு வாசல்களில் தண்ணீர் தேங்குவதை தடுத்தாலே டெங்கு பாதிப்பு வராமல் தடுக்கலாம். ஆஸ்பத்திரிகளில் குறிப்பிட்ட நேரத்தில் டாக்டர்கள் வருகிறார்களா என்றும் கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், மேயர் பிரியா, அசன் மவுலானா எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.