ஆபத்து ஏற்படும் வகையில் அமைத்து இருப்பதாக வழக்கு: தி.மு.க. கொடிக்கம்பத்தை 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும்- கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆபத்து ஏற்படும் வகையில் அமைத்து இருப்பதாக வழக்கில் தி.மு.க. கொடிக்கம்பத்தை 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-10-17 20:32 GMT


திருச்சியை சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் கடந்த 1990-ம் ஆண்டு முதல் தி.மு.க. உறுப்பினராக உள்ளேன். இதற்கிடையே, திருவெறும்பூர் குண்டூர் கிராமம் அருகே புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை வளைவு அருகில் 100 அடி உயர தி.மு.க. கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி வாகனப்போக்குவரத்து அதிகம் உள்ள இடமாகும். அத்துடன் பஸ் நிறுத்தம் இருப்பதால் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கொடிக்கம்பம் அமைத்து இருப்பதால் மழை மற்றும் புயல் காலங்களில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கம்பத்தை சட்டவிரோதமாக அரசு புறம்போக்கு நிலத்தில் அமைத்துள்ளனர். எனவே இதனை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, 100 அடி உயர கொடிக்கம்பத்தை 15 நாளில் அகற்ற திருச்சி மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில், கோர்ட்டு உத்தரவை பின்பற்றாத கலெக்டர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது, ஆளுங்கட்சியாக இருப்பதால் கொடிக்கம்பத்தை கலெக்டர் அகற்றவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆளுங்கட்சியின் கொடிக்கம்பம் என்றாலும், ஆபத்து ஏற்படும் வகையில் அமைத்து இருப்பதை அனுமதிக்க முடியாது. சட்டம் என்பது அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானது. எனவே கலெக்டரின் இந்த செயல் கோர்ட்டு அவமதிப்பாகும். எனவே வருகிற 31-ந் தேதிக்குள் கொடிக்கம்பத்தை அகற்றி விட்டு அது குறித்த அறிக்கையை திருச்சி கலெக்டர் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்