கிறிஸ்தவர்கள் தலையிடக்கூடாது என வழக்கு:கோவில் திருவிழாவை நடத்த நடவடிக்கை- அறநிலையத்துறை அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் திருவிழாவில் கிறிஸ்தவர்கள் தலையிடக்கூடாது என தொடர்ந்த வழக்கில், விழாவை நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கோவில் திருவிழாவில் கிறிஸ்தவர்கள் தலையிடக்கூடாது என தொடர்ந்த வழக்கில், விழாவை நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கிறிஸ்தவர்கள் தலையீடு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, முகில்தகம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் வழிபடுவது, நிர்வகிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இந்துக்கள்தான் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் எங்கள் ஊரில் உள்ள ஏழுதரீரமுடைய அய்யனார் கோவில், காளி கோவில் ஆகியவற்றையும் இந்துக்களே நிர்வகிப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சிலர், இந்த கோவிலின் நிர்வாகத்தில் தலையிடுகின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் இந்த கோவில்களின் திருவிழாவை அமைதியான முறையில் நடத்தவிடாமல் தடுக்கின்றனர்.
இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டுக்காக திருவிழா நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சுமுகமான தீர்வு ஏற்படாததால், கோவில் திருவிழா நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.
திருவிழாவுக்கு அனுமதி
இதனால் பக்தர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தாசில்தாரின் உத்தரவை ரத்து செய்து, கோவில் திருவிழாவை வழக்கம் போல நடத்த அனுமதிக்க வேண்டும். இதில் கிறிஸ்தவர்கள் தலையிடக்கூடாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை தங்களது கடவுளாக வழிபடுகின்றனர். கிறிஸ்தவ பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களாக வாழ்கின்றனர். ஆனால் இந்து கோவில் நிர்வாகத்தில் தலையிடுகின்றனர் என மனுதாரர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
திருவிழாவில் தலையிட தடை
எனவே இந்த கோர்ட்டு அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை முகில்தகம் கிராமத்தின் இந்து கோவில் விவகாரத்தில் கிறிஸ்தவர்கள் தலையிடுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது. கோவில் திருவிழாவை வழக்கம் போல இந்த ஆண்டும் வருகிற 8-ந்தேதி கொண்டாடுவதற்கு மனுதாரரும், அறநிலையத்துறை உதவி கமிஷனரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, திருவாடானை தாசில்தார், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த வழக்கு வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.