துணைத்தலைவர் மீது வழக்கு

மேலூர் ஊராட்சி தலைவி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக துணைத்தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-06-18 14:18 GMT

குன்னூர், 

மேலூர் ஊராட்சி தலைவி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக துணைத்தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை முயற்சி

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேலூர் ஊராட்சி மன்ற தலைவியாக அ.தி.மு.க.வை சேர்ந்த ரேணுகாதேவி (வயது 48) உள்ளார். இந்த ஊராட்சியின் துணைத்தலைவராக தி.மு.க.வை சேர்ந்த நாகராஜ் இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பணி செய்ய விடாமல் தடுத்ததாக துணைத்தலைவர் மீது குற்றச்சாட்டு கூறி ரேணுகாதேவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துணைத்தலைவர் மீது வழக்கு

இந்த சம்பவம் குறித்து கொலக்கொம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஊராட்சி மன்ற தலைவி ரேணுகாதேவியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், துணைத்தலைவர் நாகராஜ் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக அலுவலக ஊழியர்கள், உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே இது தொடர்பான புகாரின்பேரில், மேலூர் ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜ் மீது பெண்ணை தகாத வார்த்தையால் திட்டுவது உள்பட 2 பிரிவுகளின் கீழ் கொலக்கொம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சந்திரசேகர், அதிகாரிகள் மற்றும் போலீசார் மேலூர் ஊராட்சி அலுவலகத்திலும் விசாரணை நடத்தினர்.  

Tags:    

மேலும் செய்திகள்