நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ்..!
எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.;
சென்னை,
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தில் இணைந்து நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திடுமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு இயற்றிய சட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ள நிலையில், அந்த சட்டத்திற்கு எதிராக ஒரு மாநில அமைச்சர் போராட்டம் அறிவிக்க முடியாது எனவும், நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து அது மாணவர் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம் என்று தெரிவித்தனர்.
மேலும் எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதுபோன்ற பொதுநல வழக்குகளை தாக்கல் செய்வதற்கும் ஒரு வரம்பு இருப்பதாக தெரிவித்தனர். இந்த வழக்கைப் பொறுத்தவரை உண்மைத்தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் கூறியபோது, வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி வழங்கிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.