தடுப்பு சுவரில் கார் மோதி காங்கிரஸ் பிரமுகர் உள்பட 3 பேர் படுகாயம்
மாங்குடியில் தடுப்பு சுவரில் கார் மோதி காங்கிரஸ் பிரமுகர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர்
மாங்குடியில் தடுப்பு சுவரில் கார் மோதி காங்கிரஸ் பிரமுகர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தடுப்பு சுவரில் மோதிய கார்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தேனூரை சேர்ந்தவர் கிரிதரன்(வயது 50). இவர் தேனூரில் ஊராட்சி மன்ற தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவராகவும் உள்ளார். இவர் தனது மகளை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதற்காக பொன்னமராவதியில் இருந்து தனது காரில் புறப்பட்டு வந்துள்ளார். உடன் அவருடைய மனைவி சுதா(42), மகள் வைஷ்ணவி ஆகியோரையும் அழைத்து வந்துள்ளார். திருப்பத்தூர்-திண்டுக்கல் சாலையில் திருப்பத்தூர் அருகே மாங்குடி என்ற இடத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் தடுப்பு சுவரில் வேகமாக மோதியது.
3 பேர் படுகாயம்
இந்த விபத்தில் கிரிதரன், சுதா, வைஷ்ணவி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.