சென்னை மன்னடியை சேர்ந்தவர் முகமது காசிம். இவர் விருதுநகர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தில் நடைபெறவுள்ள கந்தூரி திருவிழாவில் கலந்து கொள்ள தனது குடும்பத்தினருடன் சிவகங்கை வழியாக காரில் சென்றார். காரை ஆஷிக் அகமது என்பவர் ஓட்டி வந்தார். பெரியகோட்டை விலக்கு அருகே சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பெயர் பலகையின் மீது மோதி அருகில் இருந்த கோழிக்கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் லேசான காயங்களுடன் தப்பினர். மேலும், கோழிக்கடையிலும் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.