பெட்ரோல் குண்டு தயாரித்த கார் டிரைவர் கைது

பரங்கிப்பேட்டையில் பெட்ரோல் குண்டு தயாரித்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2022-10-06 18:45 GMT

பெட்ரோல் குண்டு

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் பெட்ரோல் குண்டு தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பரங்கிப்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் விரைந்து சென்று, வடக்கு தெருவில் ராஜகோபால் மகன் தனசிங்கு (வயது 39) என்பவரின் வீட்டு பின்புறம் உள்ள வைக்கோல் போரில் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு மஞ்சள் நிற கட்டை பையில் 10 பாலித்தீன் பைகளில் பெட்ரோல் ஊற்றி முடிச்சு போட்டு வைக்கப்பட்டு இருந்தது. மேலும் 2 பீர் பாட்டில்களில் பெட்ரோல் ஊற்றி, திரி வைத்தும் பெட்ரோல் குண்டு தயாரித்து வைக்கப்பட்டு இருந்தது. இதை போலீசார் கைப்பற்றினர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை பிரிவு நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று, முக்கிய தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் கூப்பரும் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது நேரம் ஓடி நின்று விட்டது. இது பற்றி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லெனின் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசிங்கை தேடி வந்தனர்.

கைது

இந்நிலையில் கொத்தட்டை மணவாய்க்கால் அருகில் ரோந்து சென்ற போலீசாரை பார்த்து, தப்பி ஓடிய தனசிங்கை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்த போது, கார் டிரைவரான தனசிங்குக்கு நிறைய கடன்களை வாங்கி, அதை திருப்பி கொடுக்க முடியாமல் திக்குமுக்காடி வந்தார். எனவே தனது காரில் பெட்ரோல் குண்டை வீசி, அதன் மூலம் இன்சூரன்ஸ் பெறலாம் என்று கருதி, தனது சகோதரர்கள் சுப்பிரமணி, தர்மலிங்கம், மற்றொருவர் என 3 பேருடன் சேர்ந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற இருந்ததும், அதற்குள் போலீசில் சிக்கிக்கொண்டதும் தெரிந்தது. இதையே அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைதான தனசிங்கை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்