பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதி 4 மாத குழந்தையுடன் பாட்டி பலி
வேடசந்தூர் அருகே பன்றி குறுக்கே வந்ததால், சாலையோர தடுப்புச்சுவரில் கார் மோதி 4 மாத குழந்தையுடன் பாட்டி உயிரிழந்தார்.
காரில் பயணம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எஸ்.எஸ்.தேவி நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது 31). பழைய இரும்பு வியாபாரி. அவருடைய மனைவி பிரியங்கா (26). இந்த தம்பதியின் மகள்கள் கிருஷ்கா (2), சாதனா தேவி (4 மாதம்). இந்தநிலையில் சிறுமி கிருஷ்காவுக்கு திடீரென நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் தனது மகளை சிகிச்சைக்காக, திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வீரமணி காரில் அழைத்து சென்றார். இவர்களுடன் பிரியங்கா, குழந்தை சாதனாதேவி மற்றும் வீரமணியின் பெரியம்மா ராஜேஸ்வரி (52) ஆகியோரும் சென்றனர்.
சாலையின் குறுக்கே பன்றி
திண்டுக்கல்லில் சிகிச்சை முடிந்ததும் அவர்கள் மீண்டும் வேடசந்தூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை வீரமணி ஓட்டினார். வேடசந்தூர்-திண்டுக்கல் சாலையில் நாகம்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையின் குறுக்கே பன்றி ஒன்று புகுந்தது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக காரை வீரமணி திருப்பினார். இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில், அங்கிருந்த பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.
பாட்டியுடன் குழந்தை பலி
கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் ராஜேஸ்வரி, குழந்தை சாதனாதேவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். வீரமணி உள்பட 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பிரியங்கா, மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ராஜேஸ்வரி, சாதனாதேவி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைக்குழந்தையுடன் பாட்டி பலியான சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.