இறைச்சி வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை
புதுக்கோட்டையில் இறைச்சி வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வெட்டிக்கொலை
புதுக்கோட்டை தொண்டைமான் நகரை சேர்ந்தவர் கலையரசன் (வயது 40), இவர் அப்பகுதியில் பன்றி இறைச்சிக்கடை நடத்தி வந்தார். இவர் நேற்று மாலை தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார்.
அப்போது அவரை மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில், படுகாயம் அடைந்த கலையரசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலையரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
பொதுமக்கள் அச்சம்
புதுக்கோட்டையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பட்டப்பகலில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பொன்னமராவதியில் கடந்த வாரம் என்ஜினீயர் மற்றும் அவரது தாயாரை படுகொலை செய்த மர்ம ஆசாமிகள் வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். தற்போது புதுக்கோட்டையில் மேலும் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.