படிக்கட்டில் பயணம் செய்ததால் பாதி வழியில் நின்ற பஸ்

பளளிகொண்டா அருகே பஸ்சில் மாணவிகள் படிக்கட்டில் பயணம் செய்ததால் பாதிவழியில் நிறுத்தப்பட்டு, மாணவிகளை இறக்கிவிட்டு செந்றனர்.

Update: 2023-07-12 19:30 GMT

பள்ளி மாணவிகள்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,250 மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலான மாணவிகள் பஸ்சில் பள்ளிக்கு வருகின்றனர். மாலையில் பள்ளி விடும் நேரத்திற்கு சரியான அரசு பஸ்கள் இல்லாததால் மாணவிகள் முண்டயஅடித்துக்கொண்டு பஸ்ஸில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி கொண்டா பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது குடியாத்தத்தில் இருந்து அகரம்சேரி வழியாக ஒடுகத்தூருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் ஏற்கனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று கொண்டு பயணம் செய்தனர்.

பாதி வழியில் நிறுத்தம்

பள்ளிகொண்டா பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றவுடன் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பஸ்சில் ஏறினர். பஸ்சில் இடம் இல்லாததால் சில மாணவிகள் படிக்கட்டில் பயணம் செய்தனர். இதை பார்த்த டிரைவர் பஸ்சை பள்ளிகொண்டா போலீஸ் நிலையம் எதிரே நிறுத்திவிட்டார். இதனால் பயணிகள் கூச்சலிட்டனர். அங்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, அனைவரையும் பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல டிரைவரிடம் அறிவுறுத்தினார்.

உடனே 20-க்கும் மேற்பட்ட மாணவிகளை அங்கேயே இறக்கிவிட்டு பஸ்சை ஓட்டிச்சென்றார். இதனால் அந்த மாணவிகள் பள்ளி கொண்டா பஸ் நிறுத்தத்திலேயே பஸ்சுக்காக காத்திருந்தனர். எனவே மாலை நேரங்களில் கூடுதலாக அரசுபஸ் இயக்க வேண்டுமென, மாணவிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்