ஒரிஜினல் போல் ஓடுது பஸ்... மலைக்க வைக்குது மலைரெயில்...!

ஒரிஜினல்போல் ஓடுது பஸ்... மலைக்க வைக்குது மலைரெயில்...!

Update: 2023-06-25 22:30 GMT

தமிழகத்தின் தொழில்நகரமாய் விளங்கும் கோவை மாநகரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். மேலும் மாநகரில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கோவை மட்டுமின்றி பிற மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தங்கியிருந்து படித்து வருகின்றனர். கோவையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று போற்றப்படும் கோவையில் உள்ள அரசு கட்டிட சுவர்கள், மேம்பால காங்கிரீட் தூண்களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் சுவரொட்டிகளை ஒட்டி அலங்கோலப்படுத்தி வருகின்றனர். இதனால் கோவை மக்கள் மட்டுமின்றி கோவைக்கு வரும் பிற மாநில மற்றும் வெளிநாட்டவர்களும் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த சுவரொட்டிகளால் வாகனங்களில் செல்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுகிறது.

ராஜராஜ சோழன், சிலப்பதிகாரம்

எனவே அரசு கட்டிட சுவர்கள் மற்றும் மேம்பால சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ஓவியங்கள் வரைய முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து முதற்கட்டமாக காந்திபுரம் மேம்பால தூண்களில் சிலப்பதிகார கதையை விளக்கும் வகையில் ஓவியங்கள் மிக தத்ரூபமாக வரையப்பட்டது. தொடர்ந்து லங்கா கார்னர் ரெயில்வே பால சுவர்களில் ராஜராஜ சோழன், கல்லணை கட்டிய கரிகால சோழன் மற்றும் இயற்கை காட்சிகள், மலர்கள் உள்ளிட்டவையும் வரையப்பட்டன.

மேலும் அவினாசி ரோடு மேம்பால தூண்களில் புலி, கரடி, வண்ணத்து பூச்சி உள்ளிட்டவையும், அங்குள்ள ரவுண்டானா சுவர்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர், நீர் வீழ்ச்சி, பாரம்பரிய புடவை உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. இந்த ஓவியங்களை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கண்டு ரசித்து மகிழ்கின்றனர். இந்த ஓவியங்களால் கோவை மாநகர் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

நீலகிரி மலை ரெயில்

இதுதவிர யுனஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நூற்றாண்டு பழமையான நீலகிரி மலைரெயில் ஓவியம் காந்திபுரம் மேம்பால தூணில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. இதுதவிர கோவையில் 20 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்ட 5-சி டவுன் பஸ்சின் காட்சியும் வரையப்பட்டு உள்ளது. இந்த அழகிய ஓவியங்களை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். சிலர் ஓவியங்கள் முன் நின்று செல்பி எடுக்கின்றனர்.

இந்த வண்ண ஓவியங்களை ஓவியர் விக்னேஷ் ஜெயகுமார் தலைமையிலான ஓவியர்கள் வரைந்து வருகின்றனர்.

மாநகராட்சி ஆணையாளர் பாராட்டு

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தமிழர்கள் மற்றும் கோவையின் பெருமைகளை விளக்கும் விதமாக பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், நீலகிரி மலை ரெயில், புலி, பாண்டா கரடி என பல்வேறு வகையான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

தொடர்ந்து பாரம்பரியமான விளையாட்டான நொண்டி, பல்லாங்குழி, சிலம்பம், கபடி, கில்லி, கண்ணாமூச்சி உள்ளிட்டவற்றை வரைய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மேம்பால தூண்கள், பாலங்களில் ஓவியங்கள் வரைந்து வரும் ஓவியர்களை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேற்று அழைத்து பாராட்டினார்.

எது எப்படியோ...ஒரிஜினல்போல் ஓடும் டவுண் பஸ், மலைக்க வைக்கும் மலை ரெயில் உள்பட பல்வேறு ஓவியங்கள், ஓவியரின் கைவண்ணத்தில் கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் கீழ் தூண்களில் அசத்தும் ஓவியங்களாக அனைவரையும் கண்டு ரசிக்க வைக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்