எடப்பாடி:-
கொங்கணாபுரம் அருகே வீட்டு சுவரில் பஸ் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பஸ்
சேலம் மாவட்டம், ஓமலூரில் இருந்து நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டு இருந்தது. இதில் 55 பயணிகள் சென்றனர். இந்த பஸ்சை சங்ககிரி அருகே உள்ள முனியம்பாளையம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் (வயது54) என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த பஸ் கொங்கணாபுரத்தை அடுத்த தங்காயூர் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியை பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது லாரி மீது மோதிய பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டின் சுவர் மீது மோதி நின்றது. இதனால் பஸ்சில் சென்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பரபரப்பு
இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இது தகவல் அறிந்ததும் கொங்கணாபுரம் போலீசார் விரைந்து சென்று டிரைவரிடம் விசாரணை நடத்தினர். சாலையோர வீட்டு சுவரில் பஸ் மோதி நின்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.