குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

கூடலூரில் பல்லாங்குழி போல் மாறிய குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-07-14 20:00 GMT

கூடலூர்

கூடலூரில் பல்லாங்குழி போல் மாறிய குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை

கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து முதுமலை, கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரள மாநிலம் மலப்புரம், திருச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக இயக்கப்படுகிறது. மேலும் சீசன் காலங்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்களும் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் கூடலூர் நகருக்குள் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதை சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து மோசமான பள்ளங்களை சீரமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்கிடையே கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

மீண்டும் பழுது

இதனால் சீரமைத்த இடங்களில் சாலை மீண்டும் குண்டும், குழியுமாக மாறி வருகிறது. இதனால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பல்லாங்குழி போல் உள்ள சாலையில் பயணம் செய்வதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் அவசர காலங்களில் ஆஸ்பத்திரிக்கு விரைவாக கொண்டு செல்ல முடியாத நிலை சாலை காணப்படுகிறது.

மேலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் நோயாளிகளை கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்