குண்டும், குழியுமான ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும்
கொள்ளிடம்-மாதிரவேளூர் இடையே குண்டும், குழியுமான ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம்-மாதிரவேளூர் இடையே குண்டும், குழியுமான ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்றங்கரை சாலை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியிலிருந்து குத்தவக்கரை, சரஸ்வதி விளாகம், கொன்னக்காட்டுபடுகை,கீரங்குடி வழியாக மாதிரவேளூர் செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலை உள்ளது. இந்த சாலையை இப்பகுதியில் உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் தினமும் லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, பள்ளி வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
வாகன ஓட்டிகள் காயம்
மேலும் சாலையில் ஜல்லிகற்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர்.
மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மழை காலம் வரும் போதெல்லாம தற்காலிகமாக உடைந்த பகுதியில் சரி செய்யும் பணி நடைபெறுகிறது. ஆனால் நிரந்தரமாக இந்த சாலையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கொள்ளிடம்-மாதிரவேளூர் இடையேயான சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த சாலை மேம்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மேலும் அவசர காலங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு உரிய நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கு ஏற்றார் போல் இந்த சாலை இல்லை. இதனால் கொள்ளிடம், சீர்காழி,சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அவசர மருத்துவ உதவியை பெற முடியாத நிலையில் உள்ளோம். இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.