காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்

ராப்பூசல், மறவாமதுரை பகுதிகளில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். காளைகள் முட்டியதில் 41 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-04-12 18:39 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் முனியாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ., இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 800 காளைகளும், 117 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

30 பேர் காயம்

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் பெரும்பாலான காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசின. சில காளைகள் அவர்களை காலால் மிதித்தன.

இதில் மாடுகள் முட்டியதில் சுரேந்தர் (வயது 17) சதீஷ்குமார் (25) சின்னத்துரை (40) பாண்டி (25) தரணிதரன் (19) உள்ளிட்ட 30 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தின் அருகே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரிசுகள்

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், தங்க நாணயம், வெள்ளி நாணயம், டி.வி., கட்டில், மெத்தை, பிளாஸ்டிக் சேர், குடம், மின்விசிறி, குக்கர், அரிசி சிப்பம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் சரக்கு ஆட்டோ, டிராக்டர், லாரி, தண்ணீர் தொட்டி மற்றும் மரங்களில் ஏறி நின்று கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

காரையூர்

காரையூர் அருகே மறவாமதுரை ஒலியநாயகி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராமத்தினர் முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டினை புதுக்கோட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் அமீர் பாட்ஷா, பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மிரட்டிய காளைகள்

வாடிவாசலில் இருந்து முதல் காளையாக கோவில் காளைகள் அவித்துவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் உள்ளூர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் மற்றும் காரையூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழைத்துவரப்பட்டிருந்த 850 காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து மின்னல் வேகத்தில் சென்ற சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்க விடாமல் மிரட்டின. இருப்பினும் பல காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். இதில் 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

11 பேர் காயம்

காளைகள் முட்டியதில் வீரர்கள் 2 பேர், பார்வையாளர்கள் 4 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 5 பேர் என மொத்தம் 11 பேர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், மின்விசிறி, டேபிள், குக்கர், ஹாட் பாக்ஸ், சில்வர் அண்டா மற்றும் பணம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

கண்டுகளித்தனர்

கீரனூர், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செங்குட்டுவன், அப்துல் ரகுமான் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மறவாமதுரை, சடையம்பட்டி, அம்மாபட்டி, ஈச்சம்பட்டி, சங்கம்பட்டி, கங்காணிப்பட்டி, சொரியம்பட்டி ஆகிய கிராமமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்