மீண்டும் ஊருக்குள் புகுந்த காட்டெருமைகள்

கூடலூரில் மீண்டும் ஊருக்குள் காட்டெருமைகள் புகுந்ததால், பொதுமக்கள் அச்சமஅடைந்து உள்ளனர்.

Update: 2023-02-09 18:45 GMT

கூடலூர்

கூடலூரில் மீண்டும் ஊருக்குள் காட்டெருமைகள் புகுந்ததால், பொதுமக்கள் அச்சமஅடைந்து உள்ளனர்.

காட்டெருமைகள்

கூடலூர் நகருக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 காட்டெருமைகள் ஊருக்குள் நுழைந்தது. இதனால் இரவு நேர வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டெருமைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தோட்டமூலா, மார்த்தோமா நகர் வழியாக தேன் வயலுக்கு காட்டெருமைகள் விரட்டியடிக்கப்பட்டது. இதனால் நகர பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று நம்பாலக்கோட்டையில் இருந்து கிள்ளூர் செல்லும் சாலையோரம் காட்டெருமைகள் மீண்டும் ஊருக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அவை சாலையோரம் இருந்த புதர்களை மேய்ந்து கொண்டிருந்தது.

தடுக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டெருமைகள் எளிதில் தாக்கக்கூடியவை. ஊருக்குள் நுழைந்து முகாமிடுவதால் பள்ளி குழந்தைகளை தனியாக அனுப்ப முடியவில்லை. ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடுமோ என அச்சமாக உள்ளது. எனவே வனத்துறையினர் காட்டெருமைகள் ஊருக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனத்தில் இருந்து திசை மாறி காட்டெருமைகள் ஊருக்குள் வந்துள்ளது. தொடர்ந்து விரட்டியும் மீண்டும் ஊருக்குள் வருகிறது. இருப்பினும் பொதுமக்கள், மாணவர்கள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்று எச்சரித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்