தாரமங்கலம் அருகே பரபரப்பு லாரி டிரைவர் உடலை துண்டித்து படுகொலை-கிணற்றில் வீசிய கொடூரம்
தாரமங்கலம் அருகே உடலை துண்டித்து லாரி டிரைவரை கொடூரமாக கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாரமங்கலம்:
கிணற்றுக்குள் கிடந்த பாதி உடல்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கருக்குப்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று மாலை ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக தகவல் பரவியது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்தனர்.
அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி ஆண் பிணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, கிணற்றுக்குள் பிணமாக கிடந்தவரது கைகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. மேலும் உடலும் பாதி மட்டும் கிடந்தது. பின்னர் அதனை மீட்டு தீயணைப்பு வீரர்கள் ெவளியே கொண்டு வந்தனர். பிரேத பரிசோதனைக்காக உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பபட்டது.
லாரி டிரைவர்
கிணற்றில் பிணமாக கிடந்தவர் தாரமங்கலம் அருகே பெரியசோரகை மாட்டுக்காரன் வளவு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மணி (வயது 50) என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மணியின் மனைவி செல்போனில் தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரிடம் பேசியுள்ளார். அதன்பிறகு மணியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று மதியம் விவசாய கிணற்றில் மணி பிணமாக மிதந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மணியின் கைகள் மற்றும் உடலை 2 ஆக துண்டித்து மர்மநபர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை கிணற்றுக்குள் வீசி உள்ளனர். ஆனால் கைகள் மற்றும் துண்டிக்கப்பட்ட உடலின் இன்னொரு பாகத்தை மர்மநபர்கள் எங்கு வீசி சென்றனர் என்ற விவரம் தெரியவில்லை.
கிணற்றுக்குள் தேடும் பணி
அப்படி இருந்தும் கைகள் மற்றும் உடலின் இன்னொரு பாகம் கிணற்றுக்குள்தான் கிடக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மோட்டார்கள் மூலம் கிணற்று நீரை வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி 2 மோட்டார்கள் கொண்டு வரப்பட்டு கிணற்று நீரை வெளியேற்றினர். ஆனாலும் உடலின் இன்னொரு பாகம் கிடைக்கவில்லை.
எனவே துண்டிக்கப்பட்ட உடல் வேறு எங்காவது வீசப்பட்டு இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் மணி வேறு எங்காவது கொலை செய்யப்பட்டு தலையும், உடலின் ஒரு பகுதியை மட்டும் இந்த கிணற்றில் வீசினார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது மணி உடல் கிடந்த கிணற்றில் இருந்து சிறிது தூரம் ஓடியது. மீண்டும் அதே இடத்துக்கு திரும்பி வந்தது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மணியின் உடலில் ஏதாவது கை ரேகைகள் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா விரைந்து வந்து பார்வையிட்டனர். மணியின் உடலின் இன்னொரு பாகத்தை கண்டுபிடிக்க போலீசார் முடுக்கி விடப்பட்டனர்.
பெண் விவகாரமா?
மணி இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசார் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கூலிப்படையை ஏவி யாராவது கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனவே மணியின் செல்போன் எண் மற்றும் அவருடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
மணி உடல் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதால், பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த கொடூர கொலை தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.