புதுமாப்பிள்ளை தூங்கிய அறைக்கு தீ வைத்த அண்ணன்

திருவட்டார் அருகே காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுமாப்பிள்ளை தூங்கிய அறைக்கு அவரது அண்ணன் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-07-07 18:45 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகே காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுமாப்பிள்ளை தூங்கிய அறைக்கு அவரது அண்ணன் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதல் திருமணம்

குமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள விராலிக்காட்டுவிளை கிராமத்தில் உள்ள ஒரு தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் அண்ணனுக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது.

அண்ணனும், தம்பியும் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் தம்பி அதேபகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கவே, 2 வாரங்களுக்கு முன்பு அவர் காதலித்த பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

அண்ணன் எதிர்ப்பு

பிறகு மாலையும், கழுத்துமாக கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இருவரும் மேஜர் என்பதால் காதல் ஜோடியை சேர்த்து வைத்து அனுப்பினர்.

பின்னர் வேர்க்கிளம்பி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காதல் ஜோடி தனியாக வசித்து வந்தது. இந்த காதல் திருமணத்தை வாலிபரின் அண்ணன் விரும்பவில்லை.

அதே சமயத்தில் தம்பி தாயாரை பார்க்க சொந்த வீட்டுக்கு வந்து சென்றபடி இருந்துள்ளார். அந்த சமயத்தில் தம்பி அங்கு அண்ணன் வசிக்கும் அறையில் படுத்து தூங்குவாராம். இது அண்ணனுக்கு பிடிக்கவில்லை.

வீட்டு அறைக்கு தீ வைப்பு

மேலும் தம்பியின் காதல் திருமணத்தை தாய் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் அண்ணன் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த அண்ணன் திடீரென பெட்ரோல் ஊற்றி தம்பி தூங்கும் அறைக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தக்கலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த கட்டில் மற்றும் துணிமணிகள் எரிந்து நாசமானது.

புதுமாப்பிள்ளையான தம்பி, தான் தூங்கிய அறைக்கு வந்து ஓய்வெடுப்பதை அண்ணன் விரும்பவில்லை. அதே சமயத்தில் வலுக்கட்டாயமாக அந்த அறையில் தான் ஓய்வெடுப்பேன், அந்த அறை எனக்கு சொகுசாக இருக்கிறது என தம்பி கூறி உள்ளார். இந்த ஆத்திரத்தில் அண்ணன் அந்த அறைக்கு தீ வைத்ததாக திருவட்டார் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்