தாயை கொன்றவர் வீட்டில் நகை, பணம் திருடிய அண்ணன்-தம்பி ைகது

வந்தவாசி அருகே தாயை கொலை செய்தவர் வீட்டில் புகுந்து 6 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருடிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இவர்களின் சகோதரி, மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-09-19 17:55 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே தாயை கொலை செய்தவர் வீட்டில் புகுந்து 6 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருடிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இவர்களின் சகோதரி, மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.

நிலத்தகராறில் கொலை

வந்தவாசியை அடுத்த கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 65). இவரது மனைவி முனியம்மாள் (62). இவர்களது நிலத்தின் அருகே அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் (50) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலமும் உள்ளது. இருவருக்கும் இடையே வரப்பு பிரச்சினையில் தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த 6-ந் தேதி முனுசாமி, அவரது மனைவி முனியம்மாள் (62) ஆகிய இருவரும் தங்களது வயலுக்கு சென்று வேர்க்கடலை செடியில் களை பறித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த சங்கர், அவரது மனைவி எட்டியம்மாள் (45) ஆகியோருக்கும் இவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த சங்கர், அவரது மனைவி எட்டியம்மாள் இருவரும் சேர்ந்து, தங்களது கையில் இருந்த மண்வெட்டியால் முனியம்மாள் கழுத்தில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே முனியம்மாள் இறந்தார்.

இதுகுறித்து தெள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர், எட்டியம்மாள் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வீடு புகுந்து திருட்டு

இதனால், அவர்களது மகன் சிவராஜ் (23) சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

கடந்த 15-ந்் தேதி முனுசாமி மகன்கள் அண்ணாமலை, சரவணன், இவர்களது சகோதரி, மைத்துனர் மற்றும் உறவினர்கள் சிறையில் இருக்கும் சங்கர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு, வீட்டின் ஜன்னல், கதவுகள் மற்றும் மாட்டுக் கொட்டகை ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த சங்கரின் மகன் சிவராஜ் சௌன்னையிலிருந்து கூடலூர் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது, முனுசாமி உள்பட குடும்பத்தினர் சிவராஜை கொலை செய்யாமல் விடமாட்டோம். உங்களை இந்த கிராமத்தில் வாழவிடமாட்டோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தெள்ளார் போலீசில் சிவராஜ் புகார் அளித்தார். அதன்ேபரில் தெள்ளார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி வழக்குப்பதிவு செய்து அண்ணாமலை, அவரது தம்பி சரவணன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் தலைமறைவான இவர்களது சகோதரி, மைத்துனரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்