திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் போதையில் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மது போதையில் வந்ததால் திருமணத்தை மணப்பெண் நிறுத்தினார்.;

Update: 2023-02-13 21:57 GMT

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடக்க இருந்தது. நேற்று முன்தினம் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர். மேடையில் மணமகளுடன் நின்று கொண்டிருந்த மணமகன் மது போதையில் மணமகள் வீட்டாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டாரிடம் மணமகள் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருமண மண்டபத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

திருமணம் நிறுத்தம்

இதுகுறித்து மணமகள் வீட்டார் தாழம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணமகன் தான் செய்தது தவறுதான், மன்னித்து விடுங்கள் என்று கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட போதிலும் மணமகள் விடாப்பிடியாக திருமணத்தை நிறுத்திவிட்டு திருமணத்துக்காக செய்யப்பட்ட செலவு மற்றும் அணிவிக்கப்பட்ட நகைகளை திரும்ப கேட்டார்.

சமாதானம் செய்ய முடியாமல் திணறிய போலீசார், வேறுவழியின்றி மணமகனை திருமண மண்டபத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்