வாலிபரின் இதயம், நுரையீரல் விமானம் மூலம் சென்னை சென்றது
வாலிபரின் இதயம், நுரையீரல் விமானம் மூலம் சென்னை சென்றது;
பெரம்பலூர் மேரிபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் கண்ணன் (வயது 20). இவர் கடந்த 16-ந்் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் நேற்று காலை மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் கண்ணனின் இதயம், நுரையீரல் உள்ளிட்டவற்றை தானமாக கொடுக்க முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கண்ணனின் இதயம் மற்றும் நுரையீரல் தானமாக பெறப்பட்டு ஐஸ் பெட்டியில் பாதுகாப்பான முறையில் சேமிக்கப்பட்டு தனி ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கிருந்து மாலை 5.30 மணிக்கு சென்னை இண்டிகோ விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 நோயாளிகளுக்கு பொருத்தப்படுவதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.