கிணற்றில் நீச்சல் பழகிய சிறுவன் சாவு; கற்று கொடுத்த தந்தையும் பலி
தாரமங்கலம் அருகே கிணற்றில் நீச்சல் பழகிய சிறுவன், கற்றுக்கொடுத்த தந்தையின் கழுத்தை இறுக பற்றியதால் இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
தாரமங்கலம்:-
தாரமங்கலம் அருகே கிணற்றில் நீச்சல் பழகிய சிறுவன், கற்றுக்கொடுத்த தந்தையின் கழுத்தை இறுக பற்றியதால் இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
நீச்சல் கற்றுக்கொடுத்தனர்
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே பாப்பாம்பாடி கிராமம் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 33), வெல்டிங் தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா. இவர்களுக்கு பிரவிஷ் (9) என்ற மகனும், பிரஷீதா (11) என்ற மகளும் இருந்தனர். அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பிரவிஷ் 5-ம் வகுப்பும், பிரஷீதா 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று மதியம் ராஜா, தனது குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க மனைவி, குழந்தைகளுடன் வீட்டுக்கு அருகில் உள்ள விவசாயி ஒருவரின் கிணற்றுக்கு சென்றார்.
கிணற்றில் ராஜாவும், பிரவீசும் நீச்சல் அடித்து கொண்டு இருந்த போது பிரவிஷ் ராஜாவின் கழுத்தை இறுக பிடித்து கொண்டதால், அவர் நீச்சல் அடிக்க முடியாமல் திணறி உள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் நீரில் மூழ்கி உள்ளனர். இந்த நிலையில் கிணற்றின் மேல் இருந்த பிரியா மற்றும் மகள் பிரஷீதா ஆகியோர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்.
பிணமாக மீட்பு
அவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றை பார்த்தனர். சிலர் உடனே கிணற்றில் குதித்து நீரில் மூழ்கிய தந்தை, மகனை தேடினர். இது குறித்து தாரமங்கலம் போலீசார் மற்றும் ஓமலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் மூழ்கிய தந்தை-மகனின் உடல்களை மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரையும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தாரமங்கலம் போலீசார் அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் நீச்சல் பழகிய சிறுவன், கற்றுக்கொடுத்த தந்தையின் கழுத்தை இறுக பற்றியதால் இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.