பிரியாணி-மதுவுடன் சென்று வீட்டில் திருடிய வாலிபர்; மெத்தையில் அயர்ந்து தூங்கினார்
பிரியாணி-மதுவுடன் சென்று வீட்டில் திருடிய வாலிபர், மது போதையில் மெத்தையில் அயர்ந்து தூங்கினார். போலீசார் சென்று எழுப்பி அவரை கைது செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
திருப்பத்தூர்,
பிரியாணி-மதுவுடன் சென்று வீட்டில் திருடிய வாலிபர், மது போதையில் மெத்தையில் அயர்ந்து தூங்கினார். போலீசார் சென்று எழுப்பி அவரை கைது செய்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
வீட்டுக்குள் வாலிபர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசேன். இவர் தனது தொழில் சம்பந்தமாக காரைக்குடி பர்மா காலனியில் வசித்து வருகிறார். நேற்று மதியம் நடுவிக்கோட்டையில் உள்ள அவரது பூட்டிய வீட்டில் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்ட நிலையில் கிடந்தன.அக்கம்பக்கத்தினர் இதை கவனித்து, நாச்சியார்புரம் போலீசாருக்கும், வெங்கடேசனுக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசாரும், வெங்கடேசனும் அங்கு விரைந்து சென்று, வீட்டை திறந்து உள்ளே செனறு பார்த்தபோது, படுக்கை அறையில் 27 வயது வாலிபர் குறட்டைவிட்டு அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தார்.
தட்டி எழுப்பிய போலீசார்
அவரது அருகில் பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி, டேபிள் பேன் உள்ளிட்ட பொருட்கள் ஒரு இடத்தில் மொத்தமாக வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் தட்டி எழுப்பினர். கண் விழித்து பார்த்தபோது, தன் முன்பு போலீசார் நிற்பதை கண்ட வாலிபர் அதிர்ச்சி அடைந்தார். திருட வந்த இடத்தில் அயந்து தூங்கியதால் சிக்கிக்கொண்டோமே என நினைத்து திருதிருவென விழித்தார்.
போதையில் இருந்த அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் வெட்டுக்குளம் அருகே உள்ள மேலசேத்தன்ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுதந்திரதிருநாதன் (வயது 27) என தெரியவந்தது. அவர், வெங்கடசேன் வீட்டிற்கு திருட வருவதற்கு முன்பாக மது குடித்துள்ளார். கையோடு கூடுதலாக மதுபாட்டில், பிரியாணி வாங்கிவிட்டு திருட வந்துள்ளார்.
பிரியாணி சாப்பிட்டான்
ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் மீது ஏறி ஓடுகளை பிரித்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் வீட்டில் இருந்து பேன், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து, மொத்தமாக அள்ளிச்செல்ல ஒரு இடத்தில் வைத்துள்ளார்..
வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக செல்லலாம்.... இப்போது என்ன அவசரம்... என கருதிய சுதந்திரதிருநாதன், களைப்பாக இருந்ததால் அங்கிருந்த படுக்கை அறைக்கு சென்று மதுவை குடித்ததுடன், பின்னர் தான் கொண்டு வந்த பிரியாணியையும் ருசித்து சாப்பிட்டுள்ளார்.
மெத்தையில் தூக்கம்
உண்ட மயகத்தால் ஒரு குட்டித்தூக்கம் போட நினைத்து, மெத்தையில் படுத்தார். நீண்டநேரம் தூங்கியதால் போலீசாரிடம் சிக்கிக்கொண்டது தெரியவந்தது..
இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து சுதந்திரதிருநாதனை கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது சம்பந்தமான வீடியோ காட்சிகளும் பரவி வருகின்றன.