பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை விரட்டி பிடித்த பொதுமக்கள்

வத்தலக்குண்டுவில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-12 14:46 GMT

வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சேர்ந்த நீலமேகம் மனைவி திவ்யா. இவர் காய்கறி வாங்குவதற்காக வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். காளியம்மன் கோவில் அருகே அவர் வந்தபோது, பின்னால் வந்த வாலிபர் ஒருவர், திவ்யாவின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை கண்இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதனால் திவ்யா, திருடன்.. திருடன்.. என்று கூச்சலிட்டபடி வாலிபரை பின்தொடர்ந்து துரத்தி சென்றார். இதற்கிடையே அவரது கூச்சல் சத்தம் கேட்டு, அங்கிருந்த பொதுமக்களும் சேர்ந்து நகை பறித்த வாலிபரை பிடிக்க விரட்டி சென்றனர். 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிய அந்த வாலிபர், எம்.வி. லாட்ஜ் தெருவுக்கு சென்றார். அப்போது பின்தொடர்ந்து வந்த பொதுமக்கள், அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நிலக்கோட்டை அருகே உள்ள சுட்டிகாலடிபட்டியை சேர்ந்த பிச்சைமணி மகன் சிவசர்மா (வயது 27) என்பதும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக நகையை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசர்மாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்