குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
அணைக்கட்டு அருகே குட்டையில் மூழ்கிசிறுவன் பலியானான்.
சந்தைக்கு சென்றார்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த மருதவள்ளிபாளையம் மந்தைவெளி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 30). சந்தைகளில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவரது முதல் மனைவி சந்தியாவிற்கு இரண்டு மகன்கள் உண்டு. கடந்த 6 ஆண்டுக்கு முன்பு சந்தியா இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து சிவா வரதலம்பட்டை சேர்ந்த பிரியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை உள்ளது. முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகளும் பிரியாவிடம் வளர்ந்து வருகின்றனர். சிவா பல்வேறு சந்தைகளில் வியாபாரத்துக்காக சென்று விடுவார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவா தனது 4 குழந்தைகளையும் அணைக்கட்டு அடுத்து ஊனை கிராமத்தில் உள்ள மாமியார் தபேந்திரி வீட்டில் விட்டுவிட்டு கொத்தமல்லி வியாபாரத்திற்காக அணைக்கட்டில் நடந்த சந்தைக்கு சென்றுவிட்டார்.
குட்டையில் மூழ்கி பலி
இந்த நிலையில் முதல் மனைவிக்கு பிறந்த ஜெயக்குமார் (8) என்ற சிறுவனை காணவில்லை. இதுகுறித்து தபேந்திரி, தனது மருமகன் சிவாவிடம் போனில் தெரிவித்துள்ளார். உடனே அவர் சென்று அக்கம் பக்கத்தில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று பகல் 12.30 மணிக்கு அந்த அந்தப்பகுதியில் உள்ள குட்டையில் ஜெயக்குமார் இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து சிவாவிடம் தெரிவித்தனர். அணைக்கட்டு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குட்டையில் மூழ்கி இறந்து கிடந்த ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சிவா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.