வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி
பணகுடி அருகே வீட்டு மாடிப்படியில் விளையாடியபோது தவறி விழுந்து 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
பணகுடி:
பணகுடி அருகே வீட்டு மாடிப்படியில் விளையாடியபோது தவறி விழுந்து 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
5 வயது சிறுவன்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு அழகியநம்பிபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி வெண்சுபா. இவர்களது 2-வது மகன் ஹரீஷ் (வயது 5). இவன் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
தவறி விழுந்தான்
நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் சிறுவன் ஹரீஷ் வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தான். மாடிப்படியில் விளையாடியபோது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து மயங்கினான்.
இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவனை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சாவு
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஹரீஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவனது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. அவனது உடல் அதே ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணகுடி அருகே வீட்டு மாடிப்படியில் விளையாடியபோது தவறி விழுந்து 5 வயது சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.