வெடிகுண்டு பிரிவு போலீசார் திடீர் சோதனை

வேலூர் கோட்டை வளாகம், காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு பிரிவு போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-28 17:30 GMT

வேலூர் கோட்டை வளாகம், காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு பிரிவு போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம்

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் வெடித்த சம்பவத்தில் ஜமேசாமுபின் உயிரிழந்தார். போலீசார் விசாரணையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக முபின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரணை செய்து வருகிறது.

கோவையை போன்று தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஏதேனும் நாசவேலையில் ஈடுபட ஜமேசாமுபின் கூட்டாளிகளுடன் திட்டம் தீட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தும்படி போலீஸ் டி.ஐ.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வேலூர் மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

வெடிகுண்டு சோதனை

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டுபிரிவு போலீசார் சோதனை நடத்தும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரன், பழனி மற்றும் பாஸ்கரன், வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் சோதனை மேற்கொண்டனர். ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடமைகள், ரெயில்களில் வந்த பார்சல்கள் மற்றும் குப்பை தொட்டிகளில் மர்மமான பொருட்கள் உள்ளதா என்று வெடிகுண்டு கண்டறியும் கருவியை கொண்டு சோதனை மேற்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சி.எம்.சி. மருத்துவமனை வளாகம் மற்றும் கார் நிறுத்தும் இடம், புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், லாங்குபஜார், கோட்டை வளாகத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தொடர்ந்து ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பயணிகளின் உடமைகளும் வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் சந்தேகப்படும் வகையில் வாகனங்கள் ஏதேனும் நின்று கொண்டிருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்