தற்கொலை செய்த வாலிபர் உடல் போலீசுக்கு தெரியாமல் புதைப்பு; கள்ளக்காதலி உள்பட 4 பேர் கைது

புளியரை அருகே தற்கொலை செய்த வாலிபர் உடல் போலீசுக்கு தெரியாமல் புதைத்த கள்ளக்காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-04 17:05 GMT

செங்கோட்டை:

புளியரை அருகே தற்கொலை செய்த வாலிபர் உடல் போலீசுக்கு தெரியாமல் புதைத்த கள்ளக்காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அழுகிய நிலையில் உடல் மீட்பு

தமிழக-கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை அருகே வனப்பகுதியில் கடந்த மாதம் 4-ந் தேதி ஒருவரது உடல் புதைக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து அந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு துர்நாற்றம் வீசியது. இதுதொடர்பாக வனத்துறையினர் புளியரை போலீசுக்கு தகவல் ெதரிவித்தனர். போலீசார் அங்கு சென்று தோண்டி பார்த்தபோது அதில் அழுகிய நிலையில் ஆண் பிணம் இருந்தது தெரியவந்தது. அந்த உடலை கைப்பற்றி, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

கள்ளக்காதல்

விசாரணையில் புதைக்கப்பட்டவர், புளியரை பகுதியைச் சேர்ந்த முருகையா (வயது 33) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

முருகையாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராசாத்தி (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

விஷம் குடித்து தற்கொலை

சம்பவத்தன்று முருகையா, ராசாத்தியின் வீட்டிற்கு சென்றார். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கு இருந்து வெளியேறிய முருகையா அதே பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து தெற்குமேடு பகுதியைச் சேர்ந்த துரை (68) என்பவர் அந்த பகுதியில் சென்றபோது, முருகையா இறந்து கிடந்ததை பார்த்தார். முருகையா, ராசாத்திக்கு தொடர்புடையவர் என்பதால் அதுகுறித்து ராசாத்தியிடம் துரை தெரிவித்தார்.

உடல் புதைப்பு-4 பேர் கைது

இதையடுத்து ராசாத்தி, துரை, புளியரைச் சேர்ந்த சிபு (24), காளி (50) ஆகிய 4 பேர் சேர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் புளியரை அருகே வனப்பகுதியில் முருகையா உடலை குழித்தோண்டி புதைத்துள்ளனர்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாகவும், போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை புதைத்ததாகவும் ராசாத்தி, துரை, சிபு, காளி ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

புளியரை அருகே தற்கொலை செய்த வாலிபர் உடல் போலீசுக்கு தெரியாமல் புதைத்த கள்ளக்காதலி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்