பூட்டிய வீட்டுக்குள் தூக்கில் தொழிலாளி பிணம்

நாகர்கோவிலில் பூட்டிய வீட்டுக்குள் தூக்கில் தொழிலாளி பிணமாக தொங்கினார். அவர் மனைவி பிரிந்து சென்றதால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-01-03 19:43 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் பூட்டிய வீட்டுக்குள் தூக்கில் தொழிலாளி பிணமாக தொங்கினார். அவர் மனைவி பிரிந்து சென்றதால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவியை பிரிந்த தொழிலாளி

நாகர்கோவில் வடசேரி அறுகுவிளை புதுத்தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 41). இவர் மார்பிள் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர்.

குமார் அறுகுவிளை புதுத்தெருவில் தனியாக வசித்து வந்தார். அவருடைய மனைவி தனது குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே மனைவி விவாகரத்தும் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இவர் தனியாக சமைத்தும், உறவினர்கள் தரும் உணவை சாப்பிட்டும் வந்தார்.

தூக்கில் பிணமாக தொங்கினார்

இந்தநிலையில் கடந்த 31-ந் தேதி குமாரை உறவினர்கள் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவரை உறவினர்கள் பார்க்கவில்லை. மேலும் அவரது வீடு உள்புறமாக பூட்டிய நிலையில் இருந்தது. ஆனால் எவ்வித சத்தமும் இல்லை. இந்தநிலையில் நேற்று இரவு அவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது வீட்டுக்குள் குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. இதனால் அவர் கடந்த 1-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

காரணம் என்ன? போலீசார் விசாரணை

பின்னர் போலீசார், குமாரின் உடலை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குமாரின் தம்பி பாபு கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவி- குழந்தையை பிரிந்ததால் குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்