ஆப்பிரிக்காவில் இருந்து வத்தலக்குண்டுவுக்கு வந்த தொழிலாளியின் உடல்

வேலைக்கு சென்ற இடத்தில் மரணம் அடைந்த தொழிலாளியின் உடல் ஆப்பிரிக்காவில் இருந்து வத்தலக்குண்டுவுக்கு வந்தது. கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2023-06-10 15:16 GMT

 தொழிலாளி சாவு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நல்லு. அவருடைய மகன் முத்துப்பாண்டி (வயது 38). கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இவர், முகவர் ஒருவர் மூலம் மேற்கு ஆப்பிரிக்காவுக்கு வேலைக்கு சென்றார்.

அங்குள்ள லிபேரியா மாகாணத்தில் மான்ரோவியா என்னுமிடத்தில் போர்வெல் சர்வீஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக முத்துப்பாண்டி வேலை செய்து வந்தார். கடந்த 26-ந்தேதி இவர், திடீரென இறந்து விட்டார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் முத்துப்பாண்டியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டனர்.

சொந்த ஊருக்கு வந்த உடல்

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடியிடம், முத்துப்பாண்டி மனைவி ஜெயலட்சுமி மனு கொடுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் முத்துப்பாண்டியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியது. அதன்படி புதுடெல்லியில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலன் காக்கும் துறை மூலம் முத்துப்பாண்டியின் உடல் விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் உடல் வந்தது.

சென்னையில் இருந்து தனி ஆம்புலன்ஸ் மூலம் முத்துப்பாண்டியின் உடல், அவரது சொந்த ஊரான எழுவனம்பட்டிக்கு நேற்று வந்தது. நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் ஆகியோர் முன்னிலையில் முத்துப்பாண்டியின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி

இதனையடுத்து கிராம மக்கள் திரண்டு வந்து முத்துப்பாண்டியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, ஈமச்சடங்குகளை செய்து முத்துப்பாண்டியின் உடல் எரியூட்டப்பட்டது.

இதற்கிடையே தொழிலாளியின் உடலை மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து எழுவனம்பட்டிக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்துக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

---------

Tags:    

மேலும் செய்திகள்