காாில் கடத்திச் சென்று பா.ஜனதா நகர செயலாளர் கழுத்தை அறுத்து படுகொலை
காரில் கடத்திச் சென்று பா.ஜனதா நகர செயலாளரை கும்பல் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தது. இதுதொடர்பாக கூலிப்படையினர் உள்பட 6 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம் நகரம் கலைஞர் நகரை சேர்ந்தவர் கலிகண்ணன் (வயது 52). இவர், பா.ஜனதா நகர செயலாளராக இருந்து வந்தார். இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வெப்பாலம்பட்டி அருகே உள்ள தனியார் குவாரிக்கு செல்லும் வழியில் நேற்று கலிகண்ணன் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கொலை குறித்து விசாரணை நடத்த தனிப்படைகள் அமைத்து உடனே உத்தரவிட்டனர். போலீஸ் விசாரணையில், கலிகண்ணன் கழுத்தை அறுத்து மர்மநபர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளது தெரியவந்தது.
திடுக்கிடும் தகவல்கள்
போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
கலிகண்ணன், ரியல் எஸ்டேட் தொழிலுடன் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்துள்ளார். மேலும் ஏல சீட்டு நடத்தி வந்ததாகவும் தெரிகிறது.
தொழில் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஹரிவிக்னேஷ்(24) என்பவருக்கும், கலிகண்ணனுக்கும் ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
காரில் கடத்தல்
இந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக கலிகண்ணனுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், திருப்பத்தூரில் பஜார் தெருவில் வாட்டர் கேன்கள் வைக்க கூடிய குடோன் ஒன்றில் தனியாக இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அவர், தான் தங்கி இருந்த குடோன் அருகில் இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் திடீரென கலிகண்ணனை தாக்கி காருக்குள் குண்டுகட்டாக தூக்கி போட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றனர்.
6 பேர் சிக்கினர்
அந்த கும்பல் மேற்படி கல்குவாரி பகுதியில் கலிகண்ணன் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். ஹரிவிக்னேசுடன் இருந்த பிரச்சினை காரணமாக கலிகண்ணன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இந்தநிலையில், ஓசூர் பகுதியில் காரில் சென்ற ஹரிவிக்னேஷ், அவருடன் இருந்த ஆந்திரா, கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் உள்பட 6 பேரை போலீசார் பிடித்தனர்.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கலிகண்ணன் கொலையை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.