கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்த பா.ஜ.க.வினர்
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.;
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி மேகதாது அணை கட்டப்படும் என்று அறிவித்துள்ளதை கண்டித்தும், இதனை எதிர்க்காத தமிழக தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் இயக்கம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் பெரம்பலூரில் நேற்று பா.ஜ.க.வினர் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பின்னர் இது குறித்து பா.ஜ.க. மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவதை தடுக்கும் வகையில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு புதிய அணை கட்டுவதற்கான ஒரு அறிவிப்பை செய்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, எந்தெந்த மாதங்களில் எவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என்று உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழக அரசிடம் கேட்டு உரிய அனுமதி பெற்று காவிரி மேலாண்மை வாரியம் கூட்டம் கூட்டி, கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பிறகுதான் மேகதாது அணையை கட்ட முடியும் என்ற ஆணையை பிறப்பித்தார்.
ஆனால் தற்போது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.900 கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. இந்த அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அழகிரி ஆகியோர் ஒரு அறிக்கையாவது விட்டிருக்க வேண்டும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்திருக்கிறது. ஆனால் பாட்னாவிலும், பெங்களூருவிலும் பா.ஜ.க.வை வீழ்த்த சிலர் ஒன்று கூடுகிறார்கள். தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என்று மேகதாது அணை கட்ட நினைக்கும் கர்நாடக முதல்-மந்திரிக்கு பெங்களூரு சென்று வாழ்த்து சொல்ல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம், என்றார். அப்போது மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.