சைக்கிள் நிறுத்தும் இடம் சமையல் கூடமாக மாறிய அவலம்

கொங்கராயபாளையம் அரசுப் பள்ளியில் சைக்கிள் நிறுத்தும் இடம் சமையல் கூடமாக மாறிய அவலம்

Update: 2023-02-08 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே கொங்கராயபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 2011-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இதையடுத்து இதே பகுதியில் புது காலனி அருகே உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கு கொங்கராயபாளையம், உடையனாச்சி, வேங்கைவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

சைக்கிள் நிறுத்தும் இடம்

பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை பள்ளி வளாகத்தில் சமையல் அறைக்கென்று தனி கட்டிடம் இல்லை. இதனால் வேறு வழியின்றி மாணவர்கள் சைக்கிள் நிறுத்துவதற்காக அமைக்கப்பட்ட இடத்தையே சமையல் அறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள அலுவலக அறையில்தான் சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு, முட்டை ஆகிய பொருட்களை வைக்கும் இருப்பு அறையாக உள்ளது. இது ஒரு ஆண்டு, 2 ஆண்டுகளாக இல்லை. 5 ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது.

குரங்குகள், நாய் தொல்லை

தற்போது சமையல் செய்யும் இடத்தில் குரங்குகள் மற்றும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குரங்குகள் அறையின் ஜன்னல் வழியாக உள்ளே புகுந்து உணவு பொருட்களை எடுத்து செல்லுகின்றன. அவற்றை துரத்தினால் கடிப்பதற்காக சீறி வருவதால் சமையலர்கள் அச்சமடைகின்றனர். போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் புதிதாக சமையல் அறை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என அரசுக்கு மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோாிக்கை விடுத்தனர்.

நிதி ஒதுக்கீடு

இதை ஏற்று கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பொது நிதியில் இருந்து சமையல் அறை கட்டுவதற்கு ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் நிதியும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2019-20-ம் ஆண்டு ரூ.36 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுநாள்வரை சமையல் அறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கான எந்தவித அறிகுறியும் இல்லை. இதனால் சமையல் அறை கூடம், சுற்றுச்சுவர் கட்டப்படுமா? என்ற சந்தேகம் மாணவர்கள், பெற்றோர், ஆசிாியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வேதனையாக உள்ளது

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பொதுவாக திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோாிக்கை மனு மூலமாகவும், போராட்டம் நடத்தியும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது வழக்கம். ஆனால் நிதி ஒதுக்கீடு செய்தும் பணியை தொடங்காததால் பணியை தொடங்குவதற்காகவும் ஒரு போராடம் நடத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள், மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளது மிகவும் வேதனையாக உள்ளது.

எனவே பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் உடனடியாக சமையல் அறை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்