வீட்டின் கதவை திறக்க முயன்ற கரடி

குன்னூர் அருகே வீட்டின் கதவை திறக்க முயன்ற கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-11 21:00 GMT

குன்னூர்

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக காட்டெருமைகள், கரடிகள் சாதாரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சமடைந்து வருகின்றனர். குன்னூர் அருகே புரூக்லென்ஸ் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் அந்த கரடி ஒரு வீட்டின் கதவை திறக்க முயன்றது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. உணவு தேடி கரடி குடியிருப்புக்குள் புகுந்து வருவதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் பகல், இரவு நேரங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்பவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்