அரசு பள்ளியில் பொருட்களை சூறையாடிய கரடி
குன்னூர் அருகே அரசு பள்ளிக்குள் கரடி புகுந்து பொருட்களை சூறையாடியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே அரசு பள்ளிக்குள் கரடி புகுந்து பொருட்களை சூறையாடியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
அரசு பள்ளிக்குள் கரடி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளில் சமீப நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் தோட்டங்களில் பச்சை தேயிலை பறிப்பது உள்ளிட்ட அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. காட்டெருமைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் தற்போது கரடிகள் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது.
குன்னூர் அருகே நான்சச் குடியிருப்பு பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. அங்குள்ள குடியிருப்பை சுற்றி தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று, தேயிலை தோட்டம் வழியாக நான்சச் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அதன் பின்னர் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்திற்குள் கரடி புகுந்தது.
பிடிக்க வேண்டும்
இதையடுத்து பள்ளி வகுப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்றது. அங்கு வகுப்பறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதுடன், சத்துணவு சமையல் கூடத்திற்குள் புகுந்தது. அங்கிருந்த உணவு பொருட்கள், சமையல் பாத்திரங்களை கரடி சூறையாடி விட்டு சென்றது. நான்சச் குடியிருப்பு பகுதிக்குள் கரடி அடிக்கடி புகுந்து வருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தற்போது அப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நான்சச் பகுதியில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி கதவை உடைத்து பொருட்களை சூறையாடிய கரடியால், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமாக உள்ளது. எனவே, கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.