தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
குன்னூரில் பலத்த மழையால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.;
குன்னூர்,
குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், இரவில் உறைபனியும் நிலவி வந்தது. இதனால் கடும் குளிரால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்தநிலையில் வங்க கடலில் புயல் உருவாகி உள்ளதால், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து கடந்த 2 நாட்களாக குன்னூரில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து பலத்த மழையாக பெய்தது. குன்னூர் மவுண்ட் ரோட்டில் தனியார் பள்ளியின் மேல்புறம் உள்ள வீட்டின் முன்பு தடுப்புச்சுவர் இடிந்து நடைபாதையில் விழுந்தது. இதனால் நடைபாதையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்த குன்னூர் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பொதுமக்கள் இந்த நடைபாதையை பயன்படுத்த வேண்டாம். மாற்றுப்பாதையை பயன்படுத்திகொள்ளுமாறு அறிவுறுத்தினர்.