பெண் காயம்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு சொந்தமான வீட்டில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 9 வீடுகள் உள்ளன. இவற்றில் பல்வேறு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனி சுவர் திடீரென்று இடிந்து கீழ் வீட்டின் முன்பகுதியில் போடப்பட்டிருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது விழுந்தது. அந்த ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் உடைந்தது.
அப்போது கற்கள் விழுந்ததில் கீழே நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த விஜயா (வயது 40) என்பவர் காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அந்த நேரத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் யாரும் வீட்டில் இருந்து வெளியே வராததால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
5 பேர் மீட்பு
மாடி வீடுகளின் முன் பகுதியில் இருந்த பால்கனி முற்றிலுமாக இடிந்து விழுந்ததால் மாடி வீடுகளில் இருந்த 2 சிறுமிகள் உள்பட 5 பேர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். இது குறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் படை வீரர்கள் ஏணி மூலம் மாடி வீடுகளில் சிக்கி தவித்த 5 பேரை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.