கிண்டியில் ஓட ஓட விரட்டி மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை

கிண்டியில் ஓட ஓட விரட்டி மளிகை கடைக்குள் புகுந்து ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-06-30 20:55 GMT

கிண்டி,

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் வெறி தினேஷ் (வயது 25). ஆட்டோ டிரைவர். கிண்டியில் நேற்று இரவு 9.30 மணியளவில் தினேசை 2 பேர் பட்டாக்கத்தியுடன் ஓட ஓட விரட்டிக்கொண்டு வந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கிண்டி வண்டிக்காரன் தெருவில் உள்ள மளிகை கடைக்குள் தினேஷ் புகுந்தார்.

ஆனாலும் அவரை விடாமல் விரட்டி ஓடிவந்த 2 பேரும் கடைக்குள் புகுந்தனர். கடைக்குள் இருந்தவர்களை கத்தியை காட்டி வெளியே அனுப்பினர். இதனால் பயந்துபோய் வெளியே வந்த கடை உரிமையாளர், 3 பேரையும் உள்ளே வைத்து கடையின் ஷட்டரை வெளிப்புறமாக பூட்டிவிட்டார்.

கடைக்குள் புகுந்த 2 பேரும் ஆட்டோ டிரைவர் தினேசை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த தினேஷ், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

2 பேர் கைது

இதுபற்றி கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மளிகை கடை ஷட்டரை திறந்து உள்ளே சென்றனர். அங்கு தினேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கடைக்குள் இருந்த பள்ளிக்கரணையை சேர்ந்த மணிகண்டன், உதய் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் கொலையான தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறையில் இருந்து வந்தவர்கள்

சம்பவ இடத்துக்கு தென் சென்னை இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, துணை கமிஷனர்கள் மகேந்திரன், தீபக் சுவாஜ், உதவி கமிஷனர்கள் ரூபன், சிவா ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.

இது பற்றி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் கொலையான தினேஷ், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ரவுடி ராபின்சனுக்கு நெருக்கமான ஆட்டோ டிரைவர் என தெரியவந்தது. அவரை எதற்காக கொலை செய்தார்கள்.? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வேறு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து நேற்று மாலைதான் வெளியே வந்தனர். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் ஆட்டோ டிரைவரை கொலை செய்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கிண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்