ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வருத்தம்

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-09-12 19:44 GMT

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த பாக்கிய ஜோசப், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடி மாவட்டம், பெரியசாமிபுரத்தில் உள்ள கல்லாறு ஓடை புறம்போக்குப் பகுதியை அதிகாரிகளின் துணையுடன் சில தனிநபர்கள் ஆக்கிரமித்து உப்பளம் நடத்தி வருகின்றனர். இதனால் மழைநீர் செல்ல வழியின்றி, வெள்ளம் ஏற்படும் நாட்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் விவசாயப்பணிகளும் பாதிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நீரின் உவர்ப்புத் தன்மை அதிகரித்து வருகிறது. இந்த கல்லாறு ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. எனவே விளாத்திகுளம் கல்லாறு ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகின்றனர் என தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்